Header Ads Widget

Main Menu Bar

test

இண்ணக்கும் அத நெனச்சா வருத்தமாத்தான் இருக்கு . . .

ஆள் செவப்பா, கொஞ்சம் வாட்ட சாட்டமா இருப்பான் . . .
மீசய சுத்தமா வழிச்சுட்டு மொளு மொளு ன்னு உரிச்ச உருளக் கெழங்கு மாதிரி இருப்பான் . . .
நம்ம கூட தான்டா படிச்சான் . . .” 

அப்படின்னு எங்க கூட படிச்ச ஒரு நண்பனப் பத்தி ஒவ்வொரு அடயாளமா சொல்லிகிட்டு வந்தான் என் நண்பன். என்னால அந்தப் பையன அடயாளம்ங் கண்டு பிடிக்க முடியல.

அட . . . அவன் வீடு கூட கீழக் கடையத்துல தாண்டா இருக்குன்னு அவன் சொன்னப்ப எனக்குக் கூடுதல் கொழப்பம்

எனக்குத் தெரியாம கீழக் கடயத்துல அப்படி ஒரு பையனா . . ? யார் அது?” ன்னு கேட்டேன்.

  அடயாளம் சொல்லிகிட்டிருந்த என் நண்பன், தெரு, லேண்ட்மார்க், வீட்டோட அடயாளம், எல்லாத்தயும் ஒவ்வொண்ணா சொன்னப்ப நான் அந்தப் பையன் யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன்

அந்த சந்தற்பத்துல உணர்ச்சி வசப்பட்டுஅவன் அந்த ---------- பையன் தான?” ன்னு அவனோட ஜாதியச் சொல்லிக் கேட்டேன்

அடயாளம் சொல்லிக்கிட்டிருந்த நண்பனோட மொகமே மாறிப் போச்சு.
நான் அதச் சொல்லக் கூடாதுங்குறதுக்காகத்தான் இவ்வளவு வெவரமா சொல்லிக்கிட்டிருக்கேன் . . .  நீ என்னடான்னா பொசுக்குன்னு சொல்லிட்ட . . . போடா . . .” ன்னு என்னப் பாத்து என் நண்பன் சொன்னப்ப எனக்கு வெக்கமாப் போச்சு. அந்த உரையாடல் ஒருவகையான நெறுடலோட அப்படியே நின்னு போச்சு.

மடிப்பாக்கம் கூட்ரோட்டுக்கு முன்னால இப்ப AXIS பேங் ன்னு மாறி இருக்குற பழைய UTI பேங்குக்கு எதுத்த மாதிரியா இருக்கும் ஒரு அரிசி மண்டி. அதுக்கு மேலதான் எங்க ரூம்.

இண்ணக்கி ஆளுக்கொரு தெசையா செதறிக் கெடக்குற நாங்க எல்லாரும் ஒண்ணு கூடி, அந்த ரூம்ல ஒரே ஒரு நாள் தங்குறதுக்கு அனுமதி கேட்டு, அதுக்கு அந்த வீட்டுக்காரர் சம்மதிச்சாலும், அந்தப் பழைய நாட்கள நிச்சயம் எங்களால திருப்பிக் கொண்டுவர முடியாது.

2006 தொடக்கத்துல ஒரு ராத்திரி நண்பன் சொந்தில் வேல் ராஜன் சோறு பொங்க, நான் பாத்திரம் விளக்க, மற்ற நண்பர்கள் காய்கறி நறுக்கன்னு ஆளாளுக்கு ஒரு வேல சொஞ்சுகிட்டே பேசிகிட்டிருந்தோம். அப்ப என்ன பேசினோம்? எதுக்காக இந்தப் பேச்சு வந்துச்சுன்னுல்லாம் தெரியல. இப்ப அமெரிக்கால இருக்குற நண்பன் சொந்தில் வேல் ராஜன்தான் நான் மொதல்ல சொன்ன உரையாடல்ல ஒரு நண்பனப் பத்தி என்கிட்ட விளக்கிகிட்டிருந்தான். அந்தப் பையன நான் ஜாதி சொல்லி அடயாளப் படுத்தினதும் மொகத்தச் சுழிச்சுக் கிட்டு பேச்ச நிறுத்திகிட்டான் செந்தில். அண்ணக்கும் சரி, அதுக் கப்புறமும் சரி, நாங்க பேசிகிட்ட பல விஷயங்கள நான் மறந்து போயிருக்கலாம். ஆனா அந்த ஒரு சம்பவம் மட்டும் என் மனசுல ஒரு படம் மாதிரி பதிஞ்சு போச்சு
.
கடையம் ஊர ரெண்டா வெட்டிப் பிரிச்சமாதிரி தெக்கு, வடக்கா ஒரு ரோடு போகும். அந்த ரோட்டுக்கு மேக்க இருக்கிறது மேலக் கடையம். அந்த ரோட்டுக்குக் கிழக்க இருக்குறது கீழக் கடையம். மேலக் கடயத்துல பல ஜாதிகளும் இருக்காங்க. ஆனா ரோட்டுக்குக் கிழக்க உள்ள கீழக் கடையத்துல பொருவாரியா ஒரு ஜாதி மட்டுந்தான் இருக்குது. அது போக ஒண்ணு ரெண்டு ஜாதிகள் சிறு குழுக்களா நாலஞ்சு குடும்பமா மட்டும் இருக்கு.

இண்ணக்கு யோசிச்சுப் பாக்கும் போது எங்க ஊர ரண்டா வெட்டிகிட்டுப் போற அந்த ரோடு கூட ஜாதிய அடுக்கு முறைல SC யையும் BC யையும் மட்டும் மற்ற ஜாதிகள்ட இருந்து தனியாப் பிரிக்கிற எல்லக் கோடுன்னு தோணுது.

கீழக் கடையத்துல பொறந்த வளந்த எனக்கு அங்க தெரியாத வீடோ, ஆளோ இருக்க முடியாதுங்கிறது என்னோட நம்பிக்க.

ஆனா கீழக் கடையத்தின் நடுப் பகுதில ரெண்டே ரெண்டு குடும்பம் மட்டும் சின்னதா வீடுகட்டி இருந்துச்சு. எங்கையும் நிலையா தங்காம நகர்ந்துகிட்டே இருக்குற பழங்குடி இனத்தச் சேந்தது அந்தக் குடும்பம். ஒரு தலைமுறைக்கு முன்னால அந்தக் குடிம்பத்துல ஒருத்தர் படிச்சு கொஞ்சம் நல்ல நொலமக்கு வந்துட்டாரு. ஒரு தலைமுறை படிப்பறிவு பெற்றா அடுத்த தலை முறை எப்படி வளருங்கிறதுக்கு அந்தக் குடும்பம் ஒரு சரியான உதாரணம். அதுக்கப்புறம் அத்தக் குடும்பத்துல அவரோட அண்ணன் பையங்க ரெண்டுபேருமே நல்ல படிச்சு இண்ணக்கி நல்ல நெலமைல இருக்குறாங்க. அதுல கடைக்குட்டி பையனப் பத்திதான் செந்தில் சொல்லிகிட்டிருந்தான்.

எங்களுக்குள்ளயே படிச்சு வளந்தாலும் அவங்க இல்லாத இடத்துல சில ஆட்கள் அவங்கள சாதி சொல்லி அடயாளப் படுத்துறதப் பாத்திருக்கேன். அந்தப் பழக்க தோசத்துலதான் அண்ணக்கி அவன் முன்னால சாதி சொல்லித் தொலச்சுட்டேன்.

எவ்வளவோ புரட்சி பேசுறோம், சாதி சொல்ல அவசியமே இல்லாத நகரத்துல வந்து வாழ்துக்கிட்டிருக்கோம், ஆனாலும் மனசின் அடியாளத்துல புதஞ்சு போய்க் கிடக்கிற இந்த ஜாதிய எண்ணம் தன்னையறியாம தலதூக்கிறுச்சேன்னு அண்ணக்கி நான் ரொம்ப வருத்தப் பட்டேன். இண்ணக்கும் அத நெனச்சா வருத்தமாத்தான் இருக்கு.

ஏன்னா நாங்க வளந்து வந்த சூழல் அப்படி. சாதிய உடைக்கணுன்னு பகுத்தறிவு சொன்னாலும் அதயும் மீறி இப்படி எங்கயாவது நம்மையறியாம அந்த அசிங்கம் வெளிப் படத்தான் செய்யுது. ஆனா அடுத்து வருகிற தலைமுறை இப்படி இருக்கணுமுன்னு அவசியமில்ல.

இண்ணக்கி ஜாதி மறுப்புத் திருமணம் பண்ணிக்கிட்டு அமொரிக்கால இருக்குற செந்தில் தன் பையனுக்கும், வேற்று மதத்துல திருமணம் பண்ணிக்கிட்டு சென்னைல இருக்குற நான் என் பொண்ணுகளுக்கும் சாதின்னு ஒண்ணு இருக்கிறதையே தெரியாம வளத்துற முடியும்.

நாங்க கலப்புத் திருமணம் பண்ணிக்கிடுறோங்கிற எண்ணமே கூட இல்லாம வெவ்வேறு சாதிகளுக்குள்ள, வெவ்வேறு இனங்களுக்குள்ள திருமண உறவு ஏற்படுறதுக்கான வாய்ப்புகள் எதிர்காலத்துல நிறைய இருக்கு. அண்ணக்கி சாதி,மதம், இனம் ங்கிற வட்டங்களெல்லாம் உடஞ்சு ஒண்ணுகலந்து மனுசன மனுசனாப் பாக்குற மனேநிலை எல்லாருக்குள்ளயும் இருக்கும்.
  
அப்படி ஒரு சமத்துவமான உலகத்ததான் என் சந்ததிகள் சந்திக்கும்ங்கிற நம்பிக்க எனக்கு இருக்கு. அண்ணக்கி, 2006ல எனக்கும் செந்திலுக்கும் நடந்த உரையாடல்ல நான் சாதி சொல்லி அசிங்கப் பட்ட மாதிரியான சூழ்நிலை யாருக்குமே ஏற்படாதுன்னு நான் ஆழமா நம்புறேன்.






இண்ணக்கும் அத நெனச்சா வருத்தமாத்தான் இருக்கு . . . இண்ணக்கும் அத நெனச்சா வருத்தமாத்தான் இருக்கு . . . Reviewed by Sumankavi on 10:17 AM Rating: 5

1 comment:

  1. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் திருமணத்திற்க்கு 'கலப்பு' என்ற சொல் பொருந்துமா என்ற கேள்வி எனக்குள் நெடுநாட்களாகவே இருக்கு.

    ஜாதிய மறுப்பு திருமணம் என்று சொல்லி மறுபடியும் அதற்கொரு ஜாதியை புகுத்துவதும் சரியாகுமா என்றும் தெரியவில்லை.

    சுயமரியாதை திருமணம் என்பது ஓரளவு அடையாளமற்று இருக்கிறது,

    என்ன பெயரிட்டு அழைத்தாலும், தற்போதைக்கு அது ஒரு தனி அடையாளமாவதைத் தவிர்க்க இயலாது.

    ReplyDelete

Follow us

Powered by Blogger.