Header Ads Widget

Main Menu Bar

test

இப்பல்லாம் அவங்க அடிச்சா திருப்பி அடிக்கிறாங்க . . . வெட்டுனா திருப்பி வெட்டுறாங்க . . .

பாஸ் நாங்கல்லாம் சாதாரணமாத்தான் இருக்கோம். நீங்கதான் ஜாதி . . . ஜாதி . . . ன்னு அதப்பத்தி ஞாபகப்படுத்திக்கிட்டு, அதப்பத்தியே பேசிகிட்டிருக்கீங்க. இதப் பேசாம இப்படியே விட்டாக் கூட அது தானா அழிஞ்சு போயிரும். ஜாதியெல்லாம் பெரிய விஷயமே இல்ல. சும்மாக் கெடக்குற சங்க ஊதிக் கெடுக்குற மாதிரி நீங்கதான் பெருசா ஊதி பூதாகரப் படுத்துறீங்க.”

ஜாதியப் பத்தி நான் தொடர்ந்து எழுத ஆரம்பிச்சப்ப நண்பர் பாலா சொன்ன கருத்து இது. இது அவர் ஒருத்தரோட கருத்தாக் கூட இருக்காது. Facebook ல என் கட்டுரைகள வாசிச்சுட்டு லைக்கோ, மென்டோ போடாமப் போன பலரது எண்ணமாக்கூட இது இருக்கலாம். சிலர் என்னோட முதல் போஸ்ட லைட்டா வாசிச்சதுக்கப்புறம் இவன் இப்படித்தாண்டா . . . ஜாதிய பூதாகரப் படுத்தி எழுதிக்கிட்டே இருப்பான்னு அடுத்தடுத்த பதிவுகள வாசிக்காம நகர்ந்து போனவங்களுக்கும் நண்பர் பாலா சொன்ன எண்ணமே மேலோங்கி இருந்திருக்கலாம்.

ஆனா ஜாதியப் பத்தியும் அது என் வாழ்க்கைல என்னென்ன மாதிரியெல்லாம் ஊடாடி இருக்குங்கிறதப் பத்தியும் எழுதி இருக்கிறத வாசிச்சிட்டு நண்பர் விஜயகுமார் சொன்ன விஷயம் – “ நீங்க எழுதுறுது ஒண்ணும் புதுசில்ல. அது உங்க அனுபவத்தோட சேந்து இருக்கிறதால கொஞ்சம் வாசிக்கிறபடியா இருக்கு. மத்தபடி இது பழய விஷயங்கள்தான். உங்க அம்மாவ அக்காங்கிற உரிமை தலித்துகளுக்கு இல்ல, தலித் பெரியவங்கள சின்னப் பசங்க கூட பேர் சொல்லிக் கூப்பிடுறது, உங்க கண்ணுமுன்னால நடந்ததால உங்களுக்குப் பெருசாத் தெரியலாம், எங்க ஏரியால வந்து பாருங்க இதவிட கேவலமான நெலமையெல்லாம் இருக்குதுன்னு சொன்னாரு விஜயகுமார்.

“70 வருஷத்துக்க்கு முன்னால உங்க தாத்தா தலைல துண்டக் கட்டுறதுக்கும், அக்ரகாரத்துக்குள்ள போறதுக்கும் தடை இருந்துச்சுன்னு சொல்றீங்க. ஆனா நான் பார்த்து பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால எங்க கூட விளையாடிகிட்டிருந்த தலித் பையன அடிச்சு அசிங்க அசிங்கமாத் திட்டி விரட்டி அனுப்பினாரு ஒரு பெரியவர். யாராவது தலித்துகள் வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு நடந்து வந்தா ---------- மவன, ---------- மவன ன்னு அவ்வளவு திமிராடா . . . வேட்டிய கீழ இறக்குடான்னு கெட்ட வார்த்தைகள்ள திட்டுறதப் பாத்திருக்கேன். எங்க தெரு வழியா சைக்கிள்ள வந்த தலித் பையன நிறுத்தி டயர்ல உள்ள காத்த எறக்கி விட்டுட்டு, “இனிமே இந்தப் பக்கம் சைக்கிள்ள ஏறி வந்த நடக்குறதே வேறன்னு எச்சரிச்சு அனுப்புறதயும் பாத்திருக்கேன்.

நாங்க டீ கடதான்  வச்சிருக்கோம். பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால எங்க கடைல குச்சியில ஒரு அலுமனியக் கிளாஸ கவுத்திப் போட்டிருப்போம். அதுலதான் தலித்துகள் டீ குடிக்கணும். கண்ணாடி டம்ளர்ங்கிறது பெரிய மரியாத. மத்த ஜாதிக்காரங்களுக்கு மட்டுந்தான் அந்த மரியாத உண்டு. ஒரு கட்டத்துல ரெட்டைக் குவளை முறைய ஒழிக்கிறதுக்காக எங்க கடைக்கு அரசாங்கத்துல இருந்து செக்கப் பண்றதுக்காக ஆளுகல்லாம் வந்தாங்க. அதுக்கப்புறம் எங்கப்பா எல்லாத்துக்கும் கண்ணாடி கிளாஸுல டீப் பொட்டுக் கொடுத்தாரு. அதுக்கு எங்க ஊர்ல பயங்கற எதிர்ப்பு. அண்ணயில இருந்து இண்ணக்கி வரைக்கும் எங்க கடைல எல்லாருக்குமே எவர்சில்வர் டம்ளர்லதான். தலித்துகள் கண்ணாடி கிளாஸ்ல டீக் குடிக்கக் கூடாதுங்கிற ஒரே காரணத்துக்காக இப்ப எல்லாருமே எவர்சில்வர் டம்ளர்ல டீக் குடிச்சிக்கிட்டிருக்காங்க.

காலம் கொஞ்சம் கொஞ்சமா மாறிகிட்டு வருது. இப்ப சில தலித் இளவட்டங்கள் அவங்க தெருலயே டீக் கட தொறந்துட்டாங்க. அங்க இந்தப் பாகுபாடெல்லாம் கிடையாது. ஆனாலும், பழக்க தோஷத்துல எங்க கடக்கி வந்துகிட்டிருக்குற சில பெருசுகள் டீய வாங்கிட்டு இண்ணக்கும் தரைல உக்காந்து தான் குடிச்சுகிட்டிருக்காங்க. டிபன் சாப்பிடுறதா இருந்தாக் கூட மத்தவங்கல்லாம் டேபிள்ள இருந்து சாப்பிட்டுக் கிட்டிருக்க இவங்க மட்டும் தரைல உக்காந்துதான் சாப்பிடுறாங்க. டேபிளெல்லாம் காலியாக் கிடந்தாக் கூட இந்த நெலமதான்.

எங்க ஊர்ல ஐயர்களெல்லாம் கிடையாது. ஆனா ஊருக்குன்னு ஒரு பொதுக் கோயில் இருக்கு. அதுல தலித்துகள் அல்லாத மத்த ஜாதிக்காரங்க மட்டுந்தான் உள்ள வந்து சாமி கும்பிட முடியும். தலித்துகள் பெரும்பாலும் கோயில் இருக்குற தெசயப்பாத்து சுமார் 100 அடியாவது தள்ளி நின்னுதான் கும்பிட்டுக்குவாங்க. கோயிலுக்கு முன்னால சுமார் 20 அடி தள்ளி ஒரு சின்ன பீடமிருக்கு சில நேரம் அதத் தொட்டு சிலர் கும்பிட்டுட்டுப் போறதப் பாத்திருக்கேன். தலித்துகள் ஏரியால ஒரு கோயிலிருக்கு அந்தக் கோயில் திருவிழால சகட இழுக்குறதுக் கெல்லாம் அனுமதி கிடையாது. ஊர் பொதுக் கோயில்லதான் தேர் இழுப்பாங்க. சில வருஷத்துக்கு முன்னால ஊர் பொதுக் கோயில்ல நாங்களும் சேந்து தேர் இழுப்போமுன்னு தலித்துகள் சண்ட போட்டதால திருவிழாவே நின்னுபோச்சு. அப்ப ஊரடங்கு உத்தரவெல்லாம் போட்டு, போலீசக் கொண்டு வந்து குவிச்சிருந்தாங்க.

 சமீபத்துல புதுசாத் தொடங்கின ஒரு கட்சிக்கு அதோட தொண்டர்கள் கொடி ஏத்துனாங்க. எங்க ஏரியால ஒரு கொடியும், பக்கத்துல உள்ள தலித் ஏரியால அவங்க ஒரு கொடியும் ஏத்துனாங்க. ஒரே கட்சியா இருந்தாக் கூட எங்கள எதுத்து எப்படிடா நீங்க கொடி ஏத்துவீங்கன்னு அந்தக் கொடிய ஒடச்சு நொறுக்கிட்டாங்க.

இப்படித்தான் ஒரு கொடியேத்துற பிரச்சன ரொம்பப் பெருசாகி, கலவரமாக, எங்க ஊருக்குத் திருமாவளவனெல்லாம் வந்து போராட்டம் பண்ணினாரு.

பொதுவா எங்க ஏரியால தலித்துகள பேரச் சொல்லிக் கூப்பிடுறதெல்லாம் கூட கிடையாது. அந்த மவன, இந்த மவன, ன்னு கெட்ட வார்த்த சொல்லிக் கூப்பிடுறதத்தான் பாத்திருக்கேன். கெட்ட வார்த்த சொல்லிக் கூப்பிடுறமேன்னு கூப்பிடுறவங்களும் நெனக்கிறதில்ல. தலித்துகளும் தன்ன இப்படிக் கூப்பிடுறாங்களேன்னு நெனக்கிறதில்ல. அது தலித்துகளக் கூப்பிடுறதுக்கான ஒரு விளிச்சொல் மாதிரி ரெண்டு தரப்புமே கேஷுவலா எடுத்துக்கிடுவாங்க. ஆனா இதெல்லாம் சில வருஷங்களுக்கு முன்னாலதான். இப்பல்லாம் தலித்துகள் எங்க ஏரியாப் பக்கமோ, நாங்க தலித்துகள் ஏரியாப் பக்கமோ போறதே இல்ல. ஒரே ஊர்ல பக்கத்துல பக்கத்துல இருந்தலும் தனித் தனித் தீவு மாதிரி ஆயிட்டோம்.”

அப்படின்னு தன்னோட ஊர்ல ஜாதி எந்த அளவுக்கு நாறிக் கெடக்குதுன்னு வெளாவரியாச் சொன்ன விஜயகுமாருக்கு பெரம்பலூர் பக்கத்துல ஒரு சின்ன கிராம் தான் சொந்த ஊர்.

நான் என்னத்தச் சொல்றது . . . ?
ஜாதிய நான் பூதாகரப் படுத்துறேன்னு சொல்ற பாலாவுக்கு பதில் சொல்றதா . . ?
இல்ல . . . நீங்க ஜாதியத் தீண்டாமைய முழுசாவே பாத்ததில்ல. நீங்க சொல்றதெல்லாம் பெரிய விஷயமே கிடையாது ன்னு சொல்ற விஜயகுமார ஏத்துக்கிறதா . . ?
ரெண்டுபேருமே என் பக்கத்துல தான் இருகுறாங்க. எங்களுக்குள்ளயே இவ்வளவு முறண்பாடுகள்ன்னா, கலப்புத் திருமணம் பண்ணிகிட்டு அமெரிக்காவுல செட்டிலாகிட்ட நண்பன் செந்திலோட பார்வை என்னவா இருக்கும்?

சென்னைலயே பொறந்து வளந்து, ஏதாவது ஒரு வித்யாலயால படிச்சுட்டு, IIT ல பட்டம் வாங்கி ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு ஏற்றுமதியான ஒரு ஐயர் பையன் தலித்துகளப் பத்தி என்ன நெனப்பான்? அவனோட ஜாதியப் பார்வை என்னவா இருக்கும்?

யாரு என்ன நெனச்சாலும் சரி, ஜாதி நம்ம சமூகத்துல புரையோடிப் போய் கிடக்குறதுதான் உண்ம.

ஒரு விவாதத்தப்ப என் நண்பர் ஒருத்தர் ரெட்டைக் குவளை முறை இண்ணைக்கும், மதுரை, கோவை, சேலம், தர்மபுரி போன்ற மாவட்டங்கள்ள சில இடங்கள்ள இருக்கிறதாகவும், சில தெருக்கள்ள தலித்துகள் செருப்பக் கூட போட்டுட்டுப் போற உரிமை இல்லைன்னும் உணர்ச்சிப் பூர்வமா வாதாடிகிட்டிருந்தாரு.
அத குறுக்கிட்டுஎன்னங்க சொலறீங்க . . . ? திருநெல்வேலிப் பக்கம் வந்து பாருங்க, இப்பல்லாம் அவங்க ( தலித்துகள் ) அடிச்சா திருப்பி அடிக்கிறாங்க. வெட்டுனா திருப்பி வெட்டுறாங்க. முன்னால மாதிரில்லாம் இல்லங்க . . . வெவரம் தெரியாமப் பேசாதீங்க . . .” ன்னு பதில் சொன்னாரு ஒரு பெரிய மனுசன்.

நல்ல கவனிங்க . . . அவங்க அடிச்சா திருப்பி அடிக்கிறாங்களாம் . . . !
வெட்டுனா திருப்பி வெட்டுறாங்களாம் . . . !
இது பெரிய வளர்ச்சியாம்.

ஜாதிங்கிறது நம்ம உணரக் கூட முடியாத அளவுக்கு ரத்தத்தோட ரத்தமா,
நரம்போட நரம்பா, பின்னிப் பெணஞ்சி கெடக்குங்கிறதுக்கு இந்தப் பெரிய மனுசனோட பதிலே சாட்சி.

அதுக்காக இத இப்படியே விட்டுற முடியாது. தெடர்ந்து பேசுவோம்.




இப்பல்லாம் அவங்க அடிச்சா திருப்பி அடிக்கிறாங்க . . . வெட்டுனா திருப்பி வெட்டுறாங்க . . . இப்பல்லாம் அவங்க  அடிச்சா திருப்பி அடிக்கிறாங்க . . . வெட்டுனா திருப்பி வெட்டுறாங்க . . . Reviewed by Sumankavi on 8:21 AM Rating: 5

No comments:

Follow us

Powered by Blogger.