Header Ads Widget

Main Menu Bar

test

அண்ணந் தம்பியா பழகுவோம் . . .


சில பெண்கள் எங்க அம்மாவ சரஸ்வதியக்கா ன்னு கூப்பிடுவாங்க. சில பெண்கள் எங்க அம்மாவ சுமனம்மா ன்னு கூப்பிடுவாங்க. வயசுக்கு மூத்தவங்களா இருந்தாக்கூட பேர் சொல்லிக் கூப்பிடுற உரிமை சிலருக்கு மட்டுந்தான் உண்டு. சில வயசான பாட்டிகள் கூட எங்க அம்மாவ சுமனம்மா ன்னுதான் கூப்பிடுறதப் பாத்திருக்கேன்.

நிர்வாக அமைப்புக்காக அரசாங்கம் ஒரு மேப் உருவாக்குறாங்க. அதுல இது மாநிலம், இது மாவட்டம், இது ஊராட்சி ன்னு சரியான எல்லைகள் வெவ்வேறு வண்ணத்துல பிரிக்கப் பட்டிருக்கும். ஆனா ஊருக்குள்ள அப்படி ஒரு மேப் தயாரிச்சோமுன்னா பெரும்பாலும் ஒவ்வொரு தெருவும் ஜாதிவாரியாத்தான் பிரிக்கப் பட்டிருக்கும். அந்த ஜாதிவாரியான தெரு ஒண்ணுல கடைக்கோடில இருந்துச்சு எங்க வீடு. எங்க வீட்டுக்குக் கீழ்புறமா ஆரம்பிக்குது தலித் மக்களோட குடியிருப்பு. அதனாலயோ என்னமோ இந்தத் தலைமுறைக் காரங்கள அண்ணன் னும் கடந்த தலைமுறைப் பெரியவங்கள பேர் சொல்லியும் கூப்பிடுற சந்தர்ப்பம் எனக்கு அதிகம் ஏற்பட்டிருக்கு.

எங்க வீட்டுக்குக் கீழ்புறமுள்ள தலித் மக்களின் குடியிருப்புக்கு பெரிய தெரு ன்னு பேரு. எங்க வீட்டுக்குச் சில எங்க தெரு பெண்களும் வருவாங்க, சில பெரிய தெரு பெண்களும் வருவாங்க. எங்க தெரு பெண்கள் மட்டுந்தான் எங்க அம்மாவ சரஸ்வதியக்கான்னு உரிமையோடக் கூப்பிடுவாங்க. ஆனா பெரிய தெருல இருந்து வர்ற பெண்கள் எங்க அம்மாவ சுமனம்மான்னுதான் கூப்பிடுவாங்க.

இதுக்குப் பொருளாதார நிலமயோ, கல்வித்தகுதியோ நிட்சயம் காரணங் கிடையாது. நாங்க ஒண்ணும் வசதியானவங்க கிடையாது. எங்கள விட வசதியான ஃபாரின் காரர் பொண்டாட்டி கூட எங்க அம்மாவ சுமனம்மா ன்னுதான் கூப்பிடுவாங்க. ஆனா எங்கள விட ரொம்ப பஞ்சத்துல அடிபட்ட எங்க தெரு பெண்களுக்கு எங்க அம்மாவ அக்கா ன்னு கூப்பிடுற உரிமை உண்டு. ரெஷன் கடைக்காரர் மகள்கள் எல்லாருமே ஓரளவுக்குப் படிச்சவங்க அதில ஒரு அக்கா காலேஜ் லெட்சரரா கூட இருக்காங்க. ஆனா அவங்களுக்குக் கூட அஞ்சாங்கிளாஸ் தாண்டாத எங்க அம்மாவ அக்கான்னு கூப்பிடுற உரிமை இல்ல.

எங்களுக்கும் சரி, அவங்களுக்கும் சரி, இப்படி ஒரு தடை இருக்குறதேத் தெரியாது. அது ஒரு பரம்மபரைப் பழக்கமா எங்க மனசுக்குள்ளப் பதிவிக்கப் பட்டிருக்கு. அவங்கள்ள சிலர் சின்ன வயசுல விபரம் தெரியாம யாரையாவது மொற சொல்லி அழச்சிருக்கலாம். நான் ஏற்கனவே சொன்னமாதிரி யாராவது ஒரு தாத்தாவோ அல்லது அக்காவோ ஜாதிக்கான மரியாதயச் சொல்லி அவங்கள குட்டி வச்சிருக்கலாம். அதனாலதான் இப்பவும் பெரிய தெரு ஆண்களுக்கும், பெண்களுக்கும் எங்க அம்மா சுமனம்மாவாவே இருக்குறாங்க. மொற சொல்லி அழைக்கிற உரிமை அவங்களுக்கு இல்ல, அல்லது அதப்பத்தி அவங்க யோசிதே கூட இல்ல.


கடந்த தலைமுற இப்படித்தான் இருந்திருக்கு. இதெல்லாம் அதுக்கான சின்னச் சின்ன உதாரணங்கள்தான். ஆனா இதவிட மோசமான நெலம கூட என் கண்ணுக்குத் தெரியாம இருந்திருக்கலாம். ஆனா போனது போகட்டும் இனிமேலாவது நாம எல்லாரும் அண்ணந், தம்பியா, அக்கா, தங்கச்சியா மொற சொல்லிப் பழகுவோம். ஜாதியத் தடைகள உடச்செறிவோம்.
அண்ணந் தம்பியா பழகுவோம் . . . அண்ணந் தம்பியா பழகுவோம் . . . Reviewed by Sumankavi on 3:58 AM Rating: 5

No comments:

Follow us

Powered by Blogger.