ஒரு நாள் எங்க
அப்பா வன்கொடுமைச் சட்டத்துல கைது செய்யப் பட்டாரு. அப்ப அவர் ரெண்டு விதமான போதைல
இருந்தாரு. ஒண்ணு மது போதை, இன்னொண்ணு புகழ் போதை. அப்ப எங்க அப்பா எங்க ஊர்லயே .
. . ஏன்? . . எங்க மாவட்டத்துலயே யாரும் செஞ்சிராத ஒரு சாதனைய செஞ்சு முடிச்சிருந்தாரு.
அந்தத் திமிர் கூட அவர அப்படிப் பேச வச்சிருக்கலாம். ஆனாலும் அவருக்குள்ள இல்லாத ஜாதிய
எண்ணத்த அந்த போதையால நிட்சயம் வெளில கொண்டு வந்திருக்க முடியாது.
இண்ணக்கி இருக்கிற
மாதிரி பெட்ரோல் வாகனங்களின் ஆக்கிரமிப்பு அப்ப கிடையாது. எண்பதுகளின் தெடக்கத்துல
வெகுஜன மக்களின் பொது வாகனமா இருந்தது சைக்கிள். சின்ன வயசுல இருந்தே வியாபாரத்துக்காக
பல கிலோமீட்டர்கள் சைக்கிள்ள சுற்றி பழக்கப் பட்டிருந்த எங்க அப்பா திடீர்ன்னு ஒருநாள்
“நான் இந்தியா முழுதும் சைக்கிள்ள சுத்தப் போறேன்” அப்படின்னு சொன்னதும் எங்க அம்மா
உட்பட பலருக்கும் அதிர்ச்சியாதான் இருந்திருக்கும். ஏதோ குடி போதைல உணர்ச்சி வசப்பட்டு
உளறுதாறுன்னு கூட சிலர் நெனச்சிருக்கலாம். ஆனா அவர் தன்னோட முடிவுல உறுதியா இருந்தாரு.
எங்க ஏரியாவுலயே
நல்ல படிச்ச குடும்பம் முத்தையா ங்கிற பெரியவரோட குடும்பம். அவர் மகன்கள்ள ஒருத்தர்
L.M. நாராயணன். அவர் பக்கத்துல உள்ள ஒரு காலேஜ்ல புரபசரா வேல பாத்தாரு. அவர எல்லாரும்
L.M.N ன்னுதான் கூப்பிடுவாங்க. தூரத்து முறைக்கு
அவர் எனக்கு பெரியப்பா வேணும். அவருக்கு “தம்பி அருணச்சலம் சைக்கிள்ள இந்தியாவ சுத்தப்
போறான்” னதும் ரொம்பவே பெரும. அவர்தான் சில லோக்கல் அரசியல்வாதிகளின் உதவியோட எங்க
அப்பவின் பயணத்துக்கு முழு சப்போட்டா இருந்தாரு.
7ம் கிளாசுக்கு
மேல படிக்காம சின்ன வயசுலயே பம்பாய்க்கு ஓடிப் போய்ட்டதால ஹிந்தி எங்க அப்பாவுக்குத்
தண்ணி பட்ட பாடு. வியபாரத்துக்காக கொஞ்ச காலம் கேரளாவுக்கும் போயிருக்கிறதால மலையாளமும்
தெரியும். இங்கிலீஷ் சரளமாப் பேச வராட்டாலும் யாராவது பேசுனா தட்டுத் தடுமாறி பதில்
சொலற ஆளவுக்குத் தெரியும். அதனால இந்தப் பயணத்துல எங்க அப்பாவுக்கு மொழி ஒரு பெரிய
பிரச்சனையா இல்ல.
அப்ப நான் ஆறுமாச
கைக் கொழந்தன்னு எங்கம்மா சொல்வாங்க. எங்க அப்பா தன்னோட இந்திய சுற்றுப்பயணத்தத் தொடங்கினாரு.
மொதல்ல கன்னியாக் குமரி, அப்புறம் திருவனந்தபுரம், அப்படியே கேரளா வழியா பாம்பே, அங்க
இருந்து குஜராத், அப்புறம் ராஜஸ்தான் வழியா பஞ்சாப் கடைசியா காஷ்மீர். இந்தியாவின்
தென் கோடில ஆரம்பிச்சு வட கோடிய சைக்கிள்ளயே தொட்டுட்டு டெல்லி, உத்திரப் பிரதேசம்,
அருணாச்சல பிரதேசம் வழியா அஸ்ஸாம் வந்து அங்க இருந்து கல்கத்தா, ஒரிசா வழியா சென்னை
வந்து கடைசியா கடையத்துல வந்து தன்னோட பயணத்த முடிக்கிறாரு எங்க அப்பா. முன்கூட்டியே
அவர் சொல்லிட்டுப் போன மாதிரி சரியா 80 நாள்ள வந்து சேந்தாரு, ஒரு நாளைக்கு 100ல இருந்து
125 கிலோமீட்டர் பயணம். “தமிழக இளைஞர் இந்தியாவை சைக்கிளில் சுற்றுகிறார்” ன்னு சில
தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிகைகள்ள பெட்டிச் செய்தியா வெளிவந்த பேப்பர் கட்டிங்குகள்
கூட எங்க வீட்ல உண்டு.
எங்க அப்பா திரும்பி
வர்ற அண்ணக்கி அவர வரவேற்கிறதுக்காக பெரிய விழாவையே ஏற்பாடு செஞ்சிருந்தாரு L.M.N பெரியப்பா.
எங்க அப்பாவுக்கு இருந்த பெருமைய விட அவர்தான் அண்ணக்கி அதிக பெருமப் பட்டிருக்கணும்.
அந்த விழா நாங்க படிச்ச R.C ஸ்கூல்லதான் நடந்திருக்கு. அதுல கைக் குழந்தையான என்ன கைல
வச்சிகிட்டு பேசின எங்க அப்பா “நான் சைக்கிள்ள இந்தியாவத்தான் சுத்தினேன். ஆனா என்
மகன் சைக்கிள்ள உலகத்தையே சுத்துவான்” ன்னு சொன்னாராம். அத எங்க அம்மா அடிக்கடி சொல்லக்
கேட்டிருக்கேன்.
அது வெறும் வரவேற்பு
நிகழ்ச்சி மட்டும்தான். அதவிட பெரிய பாராட்டு விழா தம்பிக்கு எடுக்கணுங்கிற எண்ணத்துல
இருந்தாரு L.M.N பெரியப்பா. ஆனா அவரோட கற்பனையெல்லாம்
வறும் கனவாப் போச்சு.
அப்ப டாஸ்மார்க்கும்
கிடயாது, ஒயின் ஷாப்பும் கிடயாது. ஊருக்குத் தென் கிழக்குல இருந்திருக்கு ஒரு சாராயக்
கட. அதுல அளவுக்கு மீறி குடிச்சிட்டு சைக்கிள்ள வந்திருக்காரு எங்க அப்பா. எங்க வீட்டுக்குக்
கீழ் புறமா உள்ள பெரிய தெரு பக்கம் வந்தப்ப வீடு கட்டுறதுக்காக வழில கல்லடிச்சு குமிச்சுப்
போட்டிருந்திருக்காங்க. “எவமுல அது . . கல்ல அடிச்சு ரோட்டுல குமிச்சு போட்டிருக்கது.
. ?” ன்னு அதிகாரமாக் கேட்டிருக்காரு எங்க அப்பா. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பெரியதெருல
வெளி நாடு போய் கொஞ்சம் சம்பாதிச்ச, மற்றும் அடுத்த தலைமுறைய படிக்க வச்ச குவைத்காரர்தான்
வீடு கட்டுறதுக்காக கல்லடிச்சுப் போட்டிருந்திருக்காரு. எங்க அப்பாவோட கேள்விக்கு அவங்க
அடக்கமாத்தான் பதில் சொல்லியிருக்காங்க. ஆனா போத தலக்கேறிய எங்கப்பா ஜாதி சொல்லித்
திட்டியிருக்காரு.
அவங்க நேரே போய்
போலீஸ்ல கம்ளைண்ட் கொடுத்திட்டாங்க. இந்தியாவையே சைக்கிள்ள சுத்தி வந்த சைக்கிள் சேம்பியனுக்குப்
பாராட்டு விழா ஏற்பாடுகள் பரபரப்பா நடந்துகிட்டிருக்க பாவம் அவர் லாக்கப்ல இருந்திருக்காரு.
பாராட்டு விழாவுக்கான
ஏற்பாடுகள மும்மறமா செஞ்சிகிட்டிருந்த L.M.N பெரியப்பாவுக்குப் பெரும் அதிர்ச்சி. அண்ணக்கி
அந்த விழா நடக்கவே இல்ல. ஜாதி பாராம எல்லாத்துக் கிட்டயும் சகஜமாப் பழகுறவர் L.M.N
பெரியப்பா. அதனால அவர் போயி குவைத்காரர்கிட்ட
பேசித்தான் கேஸ வாபஸ் வாங்க வச்சிருக்காரு.
அந்தச் சம்பவம்
மட்டும் நடக்காம இருந்திருந்தா எங்க அப்பாவுக்கும், எங்க குடும்பத்துக்கும் அந்த ஊருக்குள்ள
பெரிய அங்கிகாரம் கிடச்சிருக்கலாம். ஆனா அதுக்கப்புறம் எங்க அப்பா “சைக்கிள் சேம்பியன்னு'”
தன்னத் தானே சொல்லிக் கிட வேண்டிய நெலமதான் இருந்துச்சு.
ஒரு நாள் என் நண்பர்களோட
நான் கோலிக்கா விளையாண்டுகிட்டிருந்தேன். அப்ப எனக்கு 6 வயசிருக்கும். அண்ணக்கி ராஜுகுட்டியண்ணன்
சொன்னது எனக்கு இண்ணக்கும் ஞாபகமிருக்கு. “ஹே . . .இவங்க அப்பா இந்தியாவ சைக்கிள்ள
சுத்தினாராண்டா” அப்படின்னு சொல்லிக்கிட்டே ஒரு குச்ச எடுத்து தரைல “உலகம்” ன்னு எழுதி
அதச் சுத்தி வந்துட்டு, “பாத்தியா . . . நான் உலகத்த நடந்தே சுத்தி வந்துட்டேன்னு நக்கல்லடிச்சு
சிரிச்சாங்க. அண்ணக்கி பதிலேதும் பேச முடியாதவனாத்தான் நான் இருந்தேன்.
குடும்பத்துல ஏற்பட்ட
சில சிக்கல்கள் காரணமா நான் எங்க அப்பாவ சந்திச்சு மூணு வருஷத்துக்கு மேல இருக்கும்.
இந்தியாவையே சைக்கிள்ள சுத்தின மனுசன் இப்ப திருநெல்வேலில ஒரு இடத்துல ரோட்டோரமா பழக்கட
பேட்டிருக்கிறதாச் சொன்னாங்க.
“செத்தவனுக்கு
ஜாதகம் பாக்காதன்னு” அடிக்கடி சொல்லிகிட்டு இருப்பாரு எங்க அப்பா. நடந்து முடிஞ்சதப்
பத்தி பெருசாக் கவலப் படாம வாழ்கைய தன் இயல்புகேற்ப வேகமா நகத்திகிட்டுப் போற அவருக்கு,
தன்னோட இந்த நெலமக்கு ஒருத்தர ஜாதி சொல்லி இழிவு படுத்துனதும் ஒரு காரணம் ன்னு உணர
முடியாமப் போகலாம். ஆனா நான் அத ஆழமா உணருறேன்.
ஒருத்தர ஜாதியச்
சொல்லி இழிவுபடுத்துற உரிம இங்க எவருக்குமே இல்ல, அவரு இந்தியாவ இல்ல உலகத்தயே சுத்தி
வந்து சாதன படச்சவரா இருந்தாலுங்கூட . . .
இழிவுபடுத்துற உரிம எவருக்குமே இல்ல . . .
Reviewed by Sumankavi
on
4:02 AM
Rating:
உங்களுடைய பல பதிவுகள் இன்று படிக்க நேரிட்டது. முதலில் படிக்கும்போது ஏன் இவ்வளவு புலமபல் என் யோசிச்சேன். இந்த பதிவு படிக்க்ம்போது புரிந்து கொண்டேன். உங்கள் அப்பா இந்தியாவை சைக்கிளில் சுற்றியது நிச்சயம் பெருமையான விசய்ம். அந்த பெருமை மிக்க மனிதர், தன் வாழ்வை வளமாக்காதது வருந்ததக்கது. தாழ்ந்த வகுப்பின் மீது பரிதாபம் இருப்பது போல் காட்டி கொள்ள விரும்புகிறீர்கள் என்ற யதார்த்ததை நீங்கள் நிச்சயம் ஒத்து கொள்ளவேண்டும். அதே சமயம் உயர்ந்த ச்மூகத்தின் மீது உங்களுக்கு வெருப்புனர்வு இருப்பதை உனர முடிகிறது. சமூகம் அந்தஸ்து மூட நம்பிக்கை இல்லை ஏனில் வாழ்கை சுவாரஸ்யம். அந்தஸ்ததை உயர்த்துபன் உயருவான், திறமை காட்டு உயரே இருப்பவன் மெர்சல் ஆவான். பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் தம்பீ..
ReplyDelete*சுவாரஸ்யம் இல்லை
Deleteசேதுராமன் சார் இதையெல்லாம் படிச்சதுக்கு நன்றி, கமென்ட் போட்டதுக்கு மிகவும் நன்றி ஆனா
ReplyDelete*சுவாரஸ்யம் இல்லை
ன்னு சொல்லியிருக்கீங்க. இது சுவாரசியத்துக்காக ரசிகர்களின் பாடாட்டுக்காக எழுதப்பட்டவை இல்லை. இது சமூகம் என்க்கு வழங்கிய அனுபவங்கள், மற்றும் அதைப்பற்றிய எனது அபிப்ராயங்கள் மட்டும்தான்.
சுவாரசியமா எழுதணுமுன்னா நான் காமகதைகள்தான் எழுதணும்.
அன்பு தம்பீ, தவறாக புரிந்து இருக்கிறீர்கள் *சுவாரஸ்யம் இல்லை என்பது (சமூகம் அந்தஸ்து மூட நம்பிக்கை இல்லை ஏனில் வாழ்கை சுவாரஸ்யம் இல்லை) இங்கு வர வேண்டும். அதை குறிப்பிட * . காமகதைகள் என எழுதியிருப்பது , வெள்ளை தாளில் தவறுதலாய் உட்காரும் கருப்பு மையை விட அசிங்கமாய் இருக்கிறது. அடுத்தவர்களுன் இனக்கமாய், இயல்பாய் உங்களால் எழுத்துகளில் கூட இருக்கமுடியவில்லை, நேரில் மிக கடினம். திருந்துங்கள்,
ReplyDelete