Header Ads Widget

Main Menu Bar

test

நான் அடிமைப் பட்டாலும் பரவாயில்லை எனக்கொரு அடிமை தேவை . . .

"டே . . . சூத்திரன் வாறாண்டா . . . சூத்திரன் வாறாண்டா " ன்னு கத்திகிட்டு எல்லாரும் அண்ணக்கி கலஞ்சு ஓடினாங்க. வாசல்ல கோலம் போட்டுகிட்டிருந்த சில பெண்கள் எதையோ பாக்கக் கூடாத அசிங்கத்தப் பாத்துட்டது மாதிரி மொகத்தச் சுழிச்சுக்கிட்டு அவசர அவசரமாப் போயி கதவ தாப்பாழ் போட்டுக்கிட்டாங்க. சில பெருசுகள் ஒண்ணுகூடி "வண்டிய ஏண்டா இந்தப் பக்கம் கொண்டுவந்த . . ? சூத்திரப்பயலே கொல்லப் பக்கமா வரணுன்னு தெரியாது . . ? " ன்னு ஆத்திரமாத் திட்டியிருக்காங்க. மாட்டுவண்டிய அக்ரகாரத்துக்குள்ள கொண்டு வந்துட்ட எங்க தாத்தா ஏதோ பண்ணக்கூடாத தப்ப பண்ணிட்டது மாதிரி பயந்து நடுங்கியிருக்காரு.

எனக்கு அப்பாவப் பெத்த தாத்தாவும் கிடயாது, பாட்டியும் கிடயாது. எங்க அம்மா வழியிலயும் அதே நெலமதான். நான் பொறக்குறதுக்கு முன்னாலயே அவங்கள்ளாம் செத்துப் போயிட்டாங்க. நான் தாத்தான்னு கூப்பிட்டு வளந்தெல்லாம் எங்க அப்பாவோட சித்தப்பாவத்தான். எனக்கு பாட்டின்னு தெரிஞ்சது செல்லம்மா பாட்டிதான். செத்துப் போன தாத்தா பாட்டிகளப் பத்தி எத்தனையோ நல்ல விஷயங்களச் சொல்லியிருந்தாலும், அவங்க யாரும் எனக்குள்ள ஒரு கற்பனையாக் கூட வந்ததில்ல அந்த அளவுக்கு சீனித் தாத்தாவும் செல்லம்மா பாட்டியும் என்ன தன் சொந்தப் பேரனா பாத்துக்கிட்டாங்க.

இப்ப இருக்குற மாதிரி பாட்டி சொன்ன கதைகள பாட்டியே இல்லாத வீட்டுக்குள்ள DVDயப் போட்டுப் பாக்கிற பாக்கியமெல்லாம் எனக்கில்ல. எங்க பாட்டியும் தாத்தாவும் எனக்கு பல கதைகள சொல்லியிருக்காங்க. அதுல பெரும்பாலானது வெறும் கதைகள் இல்ல. அது அவங்களோட வாழ்வியல் அனுபவங்கள். 80 வருஷத்துக்கு முன்னால எங்க தாத்தா போலீசுக்கு செலக்டானது தொடங்கி அதப் பாட்டி வேண்டான்னு தடுத்து, மணிமுத்தாறு டேமுக்கு மேல புல்லறுத்துக்கிட்டிருந்தப்ப ஒரு பெரிய உடும்ப கல்லத்தூக்கிப் பொட்டு கொன்னு புடிச்சதுன்னு பல சம்பவங்கள் அதுல உண்டு. அதுல ஒண்ணுதான் அந்த அக்ரகாரத்துச் சம்பவம்.

இருட்டுக்குள்ள ஒண்ணுக்குப் போனாக் கூட தொணக்கி நான் போக வேண்டியதிருக்கு, இவரா போலீசாயி திருடன புடிக்கப் போறாரு?” ன்னு எங்க பாட்டிதான் போலீஸுக்கு செலக்டாகியிருந்த எங்க தாத்தாவ தடுத்திருக்காங்க. அதுக்கப்புறம் அகரகாரத்துல ஒரு ஐயர் வீட்ல வேல செஞ்சிருக்காரு எங்க தாத்தா.

நல்ல அகலமான வீதி. ரெண்டுபக்கமும் இடைவெளி இல்லாம அடுக்கி வச்சது மாதிரியான வீடுகள். உள்ள போனா ஒரு ரயில்வண்டியோட ரிசர்வ் கம்பாட்மண்ட் மாதிரி அடுத்தடுத்து நீண்டுகிட்டே போற அறைகள். கடைசியா அடுத்த தெருல போய் இணைற கொல்லப்புறம். இதுதான் நான் பார்த்த அக்ரகாரம். பொதுவா எல்லா ஊர்லயும் இப்படித்தான் இருக்கமுன்னு நெனக்கிறான். அதுல ஒரு வீட்டுல தோட்டக்காரரா இருந்த எங்க தாத்தா, தேட்டத்துல இருந்து திரும்பி வர்றப்ப தேங்கா, தென்ன மட்ட இதுகள மாட்டு வண்ணடில ஏத்திகிட்டு வர்றது வழக்கம். அப்ப அக்ரகாரத்துக்ககுப் பின்புறமா உள்ள தெருவழியா வந்து கொல்லப் பொறத்துல வந்துதான் வண்டிய நிறுத்துவாறு. வந்த களைப்புல வண்டிமாட்ட கட்டிட்டு அங்க உள்ள ஏதாவது கல்லுல உக்காந்தாக் கூட அவர் நகந்ததுக்கப்புறமா அந்தக் கல்லயே தண்ணி ஊத்துக் கழுவி விடுவாங்களாம்.

அப்படி இருக்குறப்ப மெயின் தெரு வழியா அவரு வண்டிய ஓட்டிக்கிட்டு வந்தா சும்மா விடுவாங்களா . . ? அத்தன கெடுபிடி பண்ணி அவர வந்த வழியே திருப்பி அனுப்பி கொல்லப் புறமா வரச் சொல்லியிருக்காங்க. ஏதோ கொலக் குத்தத்தப் பண்ணின மாதிரி தலயில இருந்த துண்ட எடுத்து கக்கத்துல மடிச்சு வச்சுக்கிட்டுக் கூனிக் குறுகி நின்னுருக்காரு எங்க தாத்தா. அண்ணக்கி அவரோட மோலாளி (முதலாளி) அவர கடுமயாத் திட்டி அனுப்பி இருக்காரு.

எங்க தாத்தாவும் பாட்டியும் சொன்ன சம்பவங்கள்ள எத்தனயோ சம்பவங்கள் எனக்கு மறந்து போயிருக்கலாம். ஆனா இந்தச் சம்பவம் மட்டும் அவரு சொன்ன மாதிரியே என் மனசுல படமாப் பதிஞ்சிருக்கு.

ஈன சாதின்னு  ஒரு சாதியால ஒதுக்கப்பட்டு அவமானப் படுத்தப்பட்ட எங்க தாத்தா பேரு சீனி ----------------. இந்த கோடிட்ட இடத்துல அவரோட ஜாதிப் பேருதான் நிரம்பி இருந்துச்சு. அது ஏன் அப்படி இருந்திருக்கு . . ? தன்ன விட உயர்ந்த ஜாதின்னு நினக்கிறவங்கக்கிட்ட துண்ட கக்கத்துல மடிச்சு வச்சுக்கிட்டு கூனிக் குறுகி நிக்கிறவரு, தன்னவிட தாழ்ந்த ஜாதின்னு சமூகத்தால கருதப்படுறவங்கக்கிட்ட துண்ட எடுத்துத் தலைல கட்டிக்கிட்டு தன் கெத்தக் காட்டுறதுக்கு அது உதவியிருக்கும். இன்ஸ்பெக்டர் முன்னால ஐயா ன்னு பணிஞ்சு போற ஏட்டையா, No Entery வர்ற பொதுஜனத்துக்கிட்ட தன்னோட அதிகாரத்தக் காமிக்கிறது மாதிரி.

ஜாதிய அடுக்குகளுக்குள்ள உள்ள இந்த அடிமை மனோநிலைதான் ஒருத்தன் தன் காலுக்குக் கீழ வேணுங்கிறதுக்காகவே, ஒருத்தன தன் தலைக்கு மேல உட்கார அனுமதிச்சிருக்கு.

இண்ணக்கிஅவர் கோட்டையில் திருமணம்” “இவர் கோட்டையில் திருமணம்ன்னு சிலர் காலர தூக்கிவிட்டுகிட்டு, மீசய முறுக்கிகிட்டு கையில அறுவாவெல்லாம் வச்சிகிட்டு நிக்கிற வால் போஸ்டரப் பாத்தா, ஒரு பூணூல் போட்ட பிராமணர் முன்னால கக்கத்துல துண்ட வச்சிகிட்டு கூனிக் குறுகி நிக்கிற எங்க தாத்தா தான் என் நினைவுக்கு வர்றாரு. பாவம் இவங்கல்லாம் எவ்வளவு கற்பனை உலகத்துல வாழ்ந்துகிட்டிருக்காங்க . . ?

எங்க தாத்தா செத்துப் பேயி 13 வருஷமிருக்கும். அப்ப அவருக்கு 85 வயசிருக்கும். குத்துமதிப்பா ஒரு 70வது வருஷத்துக்ககு முன்னாலதான் இப்படிப் பட்ட ஒரு நெலம இருந்திருக்கு. இந்த எழுபது வருஷத்துல எத்தனயோ மாற்றங்கள் நடந்து போச்சு.

கடந்த கலைஞர் ஆடசியில ஜாதிய அடுக்குகள ஒடச்சு, எல்லாரயும் ஒரே எடத்துல தங்க வக்கிறதுக்கான சிறு முயற்சி நடந்துச்சு. அதுதான் சமதுவ புறம் திட்டம். ஆனா இண்ணக்கி அந்தத்திட்டம் எங்க ஊருக்குள்ளத் தேவயே இல்ல. எங்கத் தாத்தாவ நுழையக் கூட அனுமதிக்காத அந்த அக்ரகாரத்துல இப்ப இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் ன்னு எல்லா மதத்தவங்களும் வீடு வாங்கி தங்கியிருக்காங்க. தலித்துகள் உட்பட எல்லா ஜாதியும் அங்க இருக்கு. அங்க இருந்த ஐயர்கள்ள பெரும்பாலோர் நவீன உலகின் அக்ரகாரமான அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்துட்டதால எங்க ஊரல ஒரு சமத்துவ புறமா இருக்கு அந்த அக்ரகாரம்.

அக்கிரகாரத்துக்குள்ள இவ்வளவு மாற்றங்கள் நடந்திருந்தாலும் ஊருக்குள்ள பெரிய மாற்றமில்ல. அந்தந்த ஜாதிகள் பெரும்பாலும் தங்களுக்கான ஜாதிய தெருக்களத் தாண்டி வேற தெருக்கள்ள வீடு வாங்கிறதில்ல. குறிப்பா தலித்துகளோட ஒண்ணுகலக்கிற எண்ணம் எங்க தாத்தாக்களின் வழித் தோன்றல்களுக்கே கூட இல்ல.
ஏன்னா ஜாதிய அடுக்கு முறைல தலித்துகள்தான் கடைக்கோடி அடிமைகள். இண்ணக்கி ஜாதி அமைப்பு முறையக் கடுமையாச் சாடி, அதுக்கு ஆதாரமா அம்பேத்கரின் வாசகங்கள எடுத்துச் சொன்னாலோ, அல்லது தன் வீட்டு திருமண வால்போஸ்டர்ல அம்பேத்கரோட போட்டோவ போட்டுகிட்டாலோ அவர ஒரு தலித்துன்னு பாக்குற நெலமதான் இருக்கு. இது ஒரு சமூகப் பிரச்சன மட்டுமில்ல, உளவியல் பிரச்சனயும் தான். தலித்துகளுக்கும் கூட தங்களுக்குக் கீழ அடிமைப் படுத்த ஒரு ஜாதி இருந்திருந்தா ஜாதிய இண்ணக்கு இருக்குற மாதிரி தீவிரமா எதுத்திருக்க மாட்டாங்களோன்னு தோணுது.

ஆனாலும் ஜாதிங்கிற பெரும் பூதத்தின் காலடியில கிடந்து நஞ்சி, பிஞ்சி, நசுங்கிப் போன நெலம இண்ணக்கும் மற்ற ஜாதிகள விட தலித்துகளுக்குத்தான் அதிகம்.

அம்பேத்கர் தன்னோடThe annihilation of caste” ங்கிற புத்தகத்துல சொல்லி இருக்குற மாதிரி, இந்து மத்தத்தையும் அதன் சாஸ்திரங்களையும் வேறோட அழிச்சா மட்டுந்தான் ஜாதியும், தீண்டாமையும், இல்லாத சமத்துவ சமுதாயத்த உருவாக்க முடியும். இல்லன்னா அது வெறும் கனவு மட்டுந்தான்.  



பின் குறிப்பு:

இந்தக் கடைசி வரிகளுக்காக மட்டும் அவசரப் பட்டு லைக் போடப்போகும் பிற மதத்து நண்பர்களின் கவனத்திற்கு.
மதங்களின் பித்தலாட்டங்களையும், அவற்றின் மூடத் தனங்களையும் பாரபட்சமில்லாமல் எழுதத் திட்டமிட்டுள்ளேன். அப்போது நீங்கள் கடுமையாய் வருத்தப் படவேண்டியதிருக்கும். Sorry


நான் அடிமைப் பட்டாலும் பரவாயில்லை எனக்கொரு அடிமை தேவை . . . நான் அடிமைப் பட்டாலும் பரவாயில்லை எனக்கொரு அடிமை தேவை . . . Reviewed by Sumankavi on 9:52 AM Rating: 5

No comments:

Follow us

Powered by Blogger.