யாருக்கு யாருல தாத்தா . . . ? உன் பாட்டி என் கூடயால -------- தா? ன்னு முகத்தச் சுழிச்சுக்கிட்டு அந்தப் பெரியவர் தன்ன ‘தாத்தா’ ன்னு முற சொல்லி கூப்புட்ட தாழ்த்தப்பட்ட பிரிவச்சேர்ந்த
என் பள்ளித் தோழனப் பாத்து சொன்னப்ப அவன் மனசு என்ன பாடு பட்டிருக்கும்?
இந்த
மாதிரியான உரையாடல்கள்தான் அவன் ஜாதிக்கான மரியாதய என் மனசுக்குயும், என் ஜாதிக்கான
மரியாதய அவன் மனசுக்குள்ளயும் மாற்றி மாற்றி உருவாக்கியிருக்கும்?
ஜாதிவாரியா
பிரிக்கப்பட்ட தெருக்கள், ஜாதிவாரியா பிரிக்கப்பட்ட கோயில்கள், ஒரேகோயிலா இருந்தா ஜாதிவாரியா
நடத்தப்படுற கொடைவிழாக்கள். அண்ணக்கி ஒட்டபடுற வால்போஸ்டர் தொடங்கி, கூப்பாடு போடுற
ஸ்பீக்கர்கள், வரைக்கும் ஒவ்வொரு ஜாதியும் தங்கள் ஜாதிப் பெருமய கட்டிக்கிட நடக்கிற
போட்டிகள். எல்லாமுந்தான் ஜாதிய அடுக்குகளுக்கான மதிப்பீடுகள ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும்
உருவாக்குது.
கிராமத்தோட
ஒப்பிட்டா நகரந்தான் சுற்றுச்சூழல் சீர்கெட்டு சாக்கடைகள் நிரஞ்சி நாறிப்போய் கிடக்கு.
ஆனா வாழ்க்கைச் சூழல் அடிப்படைல பாத்தா நகரத்த விட கிராமத்துலதான் ஜாதிங்கிற சாக்கடை
தேங்கி நாறிப்போய் கிடக்குறத அதிகம் பாக்க முடியுது.
அந்தப்
பொம்பளய நான் ‘செவுனு’ ன்னு பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.
அவங்க சாகும்போது அவங்களுக்கு 90 வயசிருக்கும்.
அப்ப எனக்கு நாலு இல்லன்னா அஞ்சி வயசுதான் இருக்கும். இன்னொரு பொம்பள, அவங்க பேரு பார்வதி. அவங்க சாகும்போது
85 வயசிருக்கும். அப்ப எனக்கு 22 வயசிருக்கும். ஆனா நான் அப்பவும் அவங்கள ‘பாவதி’ன்னு பேர் சொல்லித்தான் கூப்பிட்டுக்கிட்டிருந்தேன்.
இன்னோரு ஆளு ‘போஸ்’. அவர்
இப்பவும் இருக்காரு. அவர நான் கடைசியாப் பாத்து நாலு வருசத்துக்கு
மேல இருக்கும். அப்ப கூட நான் அவர பேரச்சொல்லித்தான் கூப்பிட்டேன்.
அவருக்கும் சுமார் 85 வயசிருக்கும்.
இப்படி
மாடசாமி, கிருஷ்ணன்,
பேச்சி, கருப்பாயி ன்னு எத்தனையோ பெரியவங்கள தெரிஞ்சோ
தெரியாமலோ பேர் சொல்லிக் கூப்பிடுறோம். அவங்களும் அதப் பெருசா
எடுத்துக்கிடுறதில்ல.
பொதுவா
கிராமத்துல சொந்தமா இல்லாட்டா கூட வயசப் பொறுத்து அண்ணே, தம்பி, மாமா, தாத்தா, பாட்டி ன்னு மொற
செப்பி அழைக்கிறது வழக்கம். ஆனா இது எல்லாம் ஒரே ஜாதிக்குள்ளயோ,
அல்லது தனக்கு நிகரான ஜாதிகளுக்குள்ளயோ மட்டுந்தான் நடக்கும்.
தாழ்த்தப்பட்டவங்கள உறவு சொல்லி அழைக்கிறது கிடயவே கிடயாது.
இந்தத்
தலமுறைல இந்த அவமதிப்பு கொஞ்சம் கொறஞ்சிருக்கு. நான் வஸ்வநாதன் அண்ணனயும், சொக்கண்ணனயும், சந்திர சேகர் அண்ணனயும் மொற சொல்லித்தான்
அழைக்கிறேன். அதே மாதிரி, கஸ்த்தூரி அக்கா,
ஃபுளோரா அக்கா ன்னு, பெரிய தெருல எனக்கு நிறய அக்காக்களுண்டு.
ஆனா இப்பவும் என் மனசுக்குள்ள போஸ், போஸாத்தான்
இருக்கிறாரு. அவர அடுத்து நான் ஊருக்குப் போகும் போது பார்த்தா
‘தாத்தா’ ன்னு கூப்பிடுவேனா? அல்லது பழக்க தோஷத்துல போஸ் ன்னு கூப்பிட்டிருவேனா? ன்னு
தெரியல.
ஆனா இப்பவும்
அந்த 85 வயசுப்
பெரியவர ஏதாவது ஒரு 4 வயசு பொடிப் பய ‘போஸ்’
ன்னு பேர் சோல்லி கூப்பிட்டுக்கிட்டிருக்கலாம்.
மனநிலை
பாதிக்கப்பட்டவர் மாதிரி எதை எதையோ பேசிக்கிட்டு ஒரு ஆள் திரிவாரு அவரக்கூட அண்ணாச்சின்னு
மரியாதயாத்தான் கூப்பிடுவோம்.
ஆனா போஸ் எங்க கண்ணுக்கு தாத்தாவாத் தெரியல. பார்வதி எங்க கண்ணுக்கு பாட்டியாத் தெரியல.
எங்க கண்ண மறச்சிருந்துது ஜாதிங்கிற திரை. அத உணரக்கூடத் தகுதியற்றவர்களாத்தான் நாங்க
இருந்தோம்.
போஸ் எங்க தெருல
உள்ள ஒரு பெரிய வீட்டுல பகல்ல வேலக்காரராவும், ராத்திரில கவக்காரராவும் வேல பாத்தாரு
(பாத்துக்கிட்டு இருக்காரு). அவருக்குன்னு குடும்பம் உண்டா . . ? அவரோட சொந்தங்கள்
யாருன்னுல்லாம் எங்களுக்குத் தெரியாது. அவர் கொஞ்சம் கடுகடுப்பான மனுசன். அவருக்குன்னு
சம்பளம் ஏதாவது உண்ணடான்னு கூடத் தெரியாது. ஆனாலும் அவர மாதிரி ஒரு ஈடுபாடான வேலக்காரரப்
பாக்கமுடியாது. எப்பவும் ஏதாவது ஒரு வேலைல பிஸியா இருப்பாரு. நடு ராத்திரில கூட ஏதாவது
சின்ன சத்தங்கேட்டாலும் டக்குன்னு எழுந்து ‘யாருய்யா அது’ ன்னு தன் கைல உள்ள நீள டார்ச்ச அடிச்சுக்கிட்டே கேப்பாரு. அவ்வளவு
அலாட்டான மனுசன்.
நாங்க அவர பேர்
சொல்லிக் கூப்பிடுறது ஒரு பக்கம், சில நேரம் அந்தப் பெரியவீட்டுக்காரர் அவர ஆத்திரத்தோட
‘ஏல போஸ் . . .’ ஆப்படின்னு மரியாதக் குறைவா கூப்பிடுறதக்
கூட பாத்திருக்கோம். ஆனா போஸுக்கு அவர விட சுமார் 30 வயசாவது அதிகமிருக்கும். தன் மகன்
வயசுள்ள ஒரு ஆள் தன்ன ‘ஏல . . .’ ன்னு கூப்பிட்டாலும் அவர ‘ஐயா’ ன்னோ, அல்லது ‘முதலாளி’
ன்னோ கூப்பிட வேண்டிய நெலமதான் இருந்துச்சு, இண்ணக்கும் இருக்கலாம். இது எல்லாத்துக்கும்
காரணம் ஜாதி, மற்றும் அவரோட பொருளாதார நெலம.
ஜாதிய ரீதியான
அவமதிப்புகளத் தடுக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டமெல்லாங் கூட இருக்கு. அது கூட ஜாதியச்
சொல்லி திட்டினாத்தான் செயல்படும். ஒரு ஜாதில பொறந்துட்டதாலயே திட்டப் பட்டாலோ? அல்லது
அவமதிக்கப் பட்டாலோ? அதத் தடுக்க அந்தச் சட்டம் உதவுமான்னு தெரியல. இன்னொண்ணு அப்படி
ஒரு சட்டம் இருக்கிறது கூட நிரய தாழ்த்தப்பட்டவங்களுக்குத் தெரியாது. அப்படியே அந்தச்
சட்டத்த சிலர் பயன்படுத்தினாலும் வெளிப்புறமான அவமதிப்புகளுக்கு மட்டுந்தன் தண்டன வழங்க
முடியும். ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் புரயோடிப்போய் கிடக்கிற ஜாதிய ரீதியான அவமரியாதய
என்ன பண்றது?
மதுரை மாவட்டத்துல
உத்தம்புரம்ங்கிற ஊர்ல தாழ்த்தப்பட்டவங்க இருக்குற தெருவுக்கும் அத ஒட்டுன வேற்று ஜாதிக்காரங்க
தெருவுக்கும் இடைல ஜாதிப் பிரச்சன காரணமா கட்டப்பட்ட சுவர் ஒண்ணு பல வருசமா இருந்துச்சு.
அத எதிர்த்து கடந்த 2008ல போராட்டம் பண்ணி அரசாங்க உதவியோட அத உடச்சாங்க. இப்படி கண்ணுக்குத்
தெரிஞ்ச சுவர்களத்தான் சட்டத்தாலயும், போராட்டத்தாலயும் உடக்க முடியும். கண்ணுக்குத்
தெரியாம ஒவ்வொருத்தர் மனசுக்குள்ளயும் எழுப்பப் பட்டிருக்கிற ஜாதியச் சுவர ஒவ்வொரு
தனி மனுசனும் மனசு வச்சா மட்டுந்தான் உடைக்க முடியும்.
மனசுக்குள்ள எழுப்பப்பட்ட சுவர என்ன பண்றது . . ?
Reviewed by Sumankavi
on
3:53 AM
Rating:
No comments: